சிவ-ராம-கிருஷ்ணன்: தர்மத்திற்குத் தோள்கொடுத்தல்

This article is part 7 of 10 in the series சிவ-ராம-கிருஷ்ணன்

மஹாபாரதத்தின் மீதுள்ள ஈர்ப்பினால் 1970க்களில் திரு எஸ். எல். பைரப்பா அவர்கள் 'பர்வா' எனும் தமது நாவலை வெளியிட்டார். அதனுள் மஹாபாரதத்தில் பொதிந்துகிடக்கும் பல அற்புதமான அம்சங்களைத் தவிர்த்து, அவ்விதிகாசத்தில் இடம்பெறும் மனிதர்கள் பற்றின கதையாக அதனை முன்வைத்தார். 'பர்வா' நாவலில் கண்ணனைப் பற்றி விதுரன் திருதிராஷ்டிரன் இடத்தில், "கண்ணனைப் பற்றி நீ தவறாக புரிந்து வைத்திருக்கிறாய். பாண்டவர்கள் அனைவரும் போரில் மாண்டுவிட்டாலும் கூட அவன் குந்தியையோ அல்லது த்ரௌபதியையோ அரியணையில் அமரச் செய்வானே ஒழிய, உனது பொல்லாத புதல்வர்களை அவன் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான்!", என்கிறான்.

கிருஷ்ணன் எந்த ஒரு தனி மனிதனின் பக்கமும் ஒரு நாளும் சாய்ந்ததில்லை; அவன் தர்மத்தின் பக்கமே எப்பொழுதும் இருந்தான்.

அப்போது ராமன் தர்மத்துக்குத் தலைவணங்கவில்லையா என்ன? உண்மையில், ராமனும் தர்மத்தின் வழியையே பின்பற்றினான். ஒரு இடத்தில் புத்திர-தர்மத்தை நிலைநாட்டினான் எனில் வேறொரு இடத்தில் பதி-தர்மத்தை நிலைநாட்டினான். ஓரிடத்தில் சகோதரத்துவ தர்மத்தைப் பின்பற்றிய அதே நேரத்தில், வேறோரிடத்தில் பெற்றோருக்கான தர்மத்தைப் பின்பற்றினான். அவன் குடும்ப உறவுகளுக்கான அளவில் தர்மத்தைப் பின்பற்றினான்.

புத்திர-தர்மத்தையோ, பதி-தர்மத்தையோ, அல்லது பித்ரு-தர்மத்தையோ கண்ணன் பெருமளவில் பின்பற்றி வந்தானா? தமது பெற்றோரின்பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்தாலுங்கூட, சமயம் வரும்பொழுது எவ்வித பந்தபாசங்களுக்கும் கட்டுப்படாமல் அவர்களை விட்டுச்சென்று உலக வாழ்க்கைக்குள் பிரவேசித்தான். தனது மனைவியரை சிறப்பாக நடத்திவந்த அதே வேளையில், அவன் தனியாய் இருக்கும் தருணங்களிலும் சுகமாகவே இருந்தான். அவன் தன்  குழந்தைகளிடத்தில் ஒதுங்கியே நின்றான். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் தவறிழைக்கையிலே அவர்களை அவன் மோசமாக நடத்தினான். ஒரு தந்தையாக அவன் ஒன்றும் சிறந்து விளங்கியதாகத் தெரியவில்லை.. முடிவில், தன்னைச் சார்ந்தவர்கள் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டு நிற்கையில், எவ்வித வருத்தமும் இன்றி அவனே ஆயுதத்தைக் கையிலெடுத்து அவர்களின் அழிவுக்குக் காரணமானான். அவர்கள்மீது அன்பு வைத்திருந்தான், அவர்களுக்காக கடுமையாக உழைத்தான், இருப்பினும் அவர்கள் தர்மத்தைப் புரக்கணிக்கையிலே, அவர்களையே அவன் எதிர்த்து நின்றான்!

கண்ணன் எந்த ஒரு தனி நபர் மீதும் பாரபட்சம் காட்டவில்லை. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் நலனுக்காக அவன் செயலாற்றியதாகத் தெரியவில்லை. அவன் ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டான். அப்போது பழமொழிகளில் வருவதுபோல என்ன அவன் வீட்டை அழித்து ஊரைக் காப்பாற்றுகிறவனா? இல்லவே இல்லை. அவன் உலகையே தனது குடும்பமாகக் கருதியதால் பொது நன்மைக்காகவே உழைத்தான். பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவர், உலகுக்கு எது உகந்ததோ அதுவே தமக்கு் உகந்ததாகக் கொள்ள வேண்டும். இந்த குணம் அவரிடத்தில் இல்லாவிட்டால், பிறருக்காக பாடுபடுவதில் அவருக்கு எவ்வித மகிழ்ச்சியும் கிட்டாது. பத்து பேருக்கு ஏதோ ஒன்று நன்மை விளைவித்தால், அது தனக்கும் நன்மை பயக்கும் என்பதே கிருஷ்ணனது எண்ணமாக இருந்தது. எவ்வளவு எளிதானு, ஆனால் கடைபிடிப்பதில் எவ்வளவு சிரமமானது!

என் குடும்பத்துக்கு எது நல்லதோ கெட்டதோ அது அவனுக்கும் பொருந்தும் என்று ராமன் சொல்கிறான். ஆனால் கண்ணனோ சமூகத்துக்கு எது நல்லதோ கெட்டதோ அது எனக்கும் பொருந்தும் என்று சொல்கிறான்! பிருந்தாவனத்தில் அவன் பல கோப-கோபிகைகளோடும் பழகி வந்தான். சந்தேகமில்லாமல் அவன் ஒரு திறன்வாய்ந்த பாலகன்தான் எனினும், அதற்காக அவன் ஒன்றும் அவர்களை வேறுபடுத்திப் பார்த்ததில்லை. அவன் அனைவரோடும் நட்பு பாராட்டி வந்தான்.

அவன் தனித்திறன் வாய்ந்தவன் என்பது நமக்கெப்படித் தெரிய வந்தது? மழலைப் பிராயத்திலிருந்தே அவன் சமூக நல்லிணக்கத்திற்கு கரம் கொடுத்தான். யாருடைய கட்டளைக்காகவும், யாருடைய தூண்டுதலுக்காகவும் அவன் காத்துக் கிடக்கவில்லை. அவனை சுற்றி நடந்த அட்டூழியங்களை அவனாகவே ஒழித்துக் கட்டினான். பற்பல அசுரர்களைக் கொன்றபோதும், காளிங்கனை வழிக்குக் கொணர்ந்தபோதும், கோவர்த்தன மலை அத்தியாயத்தின்போதும், அவன் ஒட்டுமொத்த சமுதாய நல்லிணக்கத்தை மனதில் வைத்தே செயல்பட்டான்.

குடும்பத்திற்கென உழைப்பவர்கள் குடும்ப பாரம்பரியத்தை நிலைநாட்ட உழைப்பார்கள். குடும்ப பாரம்பரியம் ஒரு மாறாத விஷயம் என்பதனால் ஒரு தலைமுறையினருக்கும்ஆ அதற்கடுத்த தலைமுறையினருக்கும் அவ்வளவாக மாற்றங்கள் ஏற்பட்டுவிட சாத்தியமில்லை. ஆனால் ஒரு சமூகத்தில் பற்பல மனிதர்கள் பலதரப்பட்ட பின்னணியிலிருந்தும், மாறுபட்ட உலகக் கண்ணோட்டத்துடனும் இடம்பெற்றிருப்பர். இவர் அனைவரும் பொதுவான ஏதாவதோர் இலக்கிற்காக இணைந்து செயல்படுவர். அதனால் இவர்கள்மீது வலுக்கட்டாயமாக எந்த ஒரு கொள்கையையும் திணித்துவிட முடியாது. குடும்பத்திலோ அனைவரும் ஒரே இரத்தம் என்பது பந்தத்தை இணைக்கும் பாலமாக அமைந்துவிடுகிறது. சமுதாயத்தில் இதுபோன்ற சிந்தனைகள் எழுவதற்கன சாத்தியங்களில்லை. அதனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வது ஒன்றும் சுலபமான காரியமல்ல. இம்மாதிரியான சமூகச் சூழலில்தான் கண்ணன் செயல்படவேண்டி வந்தது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டான் கண்ணன்.

'இந்திரத்வஜோஸ்தவம்' எனும் நகரத்தாரின் பண்டிகையைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவதைத் தவிர்த்து நாம் ஏன் இங்குள்ள கோவர்த்தன மலையை வணங்கக் கூடாது என்று அவன் கேட்டான். 'இந்திரத்வஜோஸ்தவம்' என்பது தமக்கு மழை அளித்து வளங்களை பெருக்கித் தந்த இந்திரனுக்கு நன்றிகூறும் வகையில் இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் அரங்கேறிய ஒரு சடங்காகும். இந்திரனை வணங்கியபின், மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆடிப்பாடி மகிழ்வர். ஆனால் இது கம்சனின் ஆட்சியில் பெரும் படாடோடம் கொண்ட பண்டிகையாக மாறி இருந்தது. அதனால் இதற்குமுன்னிருந்த பொலிவை இழந்திருந்தது. கம்சனது ஆட்சியின்போது, இந்த கொண்டட்டம் நெடுநாள்வரை நீடிக்கும் ஒரு படாடோபமான சடங்காக மாறி இருந்தது.

சமூக அளவில் இதுபோன்ற படாடோபத்தை, பொதுவாக அரசனே தவறான வழியில் செல்கையில்தான் பார்க்கலாம். குடும்பத்தில் இதுபோன்ற குதூகலங்கள் வரையறைக்கு உட்பட்டுதான் நடக்கும். ஆனால் இதுபோன்ற சமூகப் பண்டிகைகள் படிப்படியாக வேகம்பிடித்து, நாளடைவில் வெறும் வேடிக்கைக் கூற்றாகப் போய்விடும். முன்பிருந்த சடங்குகளை நேர்கட்ட முயற்சிக்காமல் கிருஷ்ணன் இங்கு எளிதான மாற்று யோசனை ஒன்றை முன்வைக்கிறான். நாம் ஏன் வனங்களையும், நீர்நிலைகளையும் வளப்படுத்தும் இந்த கோவர்த்தன மலையை வணங்கக்கூடாது? கிருஷ்ணன் ஒன்றும் இந்திரனை எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் இந்திரனுக்குரிய எண்ணிறந்த யாகயக்ஞங்களை மேற்கொண்டிருக்கிறான். ஆனால் அவனால் மக்களது இந்த தேவையற்ற படாடோபத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை. பண்டிகையின் அசலான காரணத்தைக் கொண்டாடும் வண்ணம் அவர்களை திசைதிருப்பினான். மனம்கவர் விதத்தில் அவர்களை அவன் சமாதானப்படுத்தினான். இந்நிகழ்வின்போது பெருமழை பொழியத் தொடங்கியதும் அனைவரும் அவனை நிந்தித்திருக்க வேண்டும். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அவன் அவர்களைக் காத்து ரக்ஷிக்கிறான்.

குடும்பத்தலைவனுக்கு தன் குடும்பத்தில் எழும் ஓரீரூ விமர்னங்களை சரிகட்ட வேண்டி வரலாம். ஆனால் ஒரு உலக நாயகன் உலக விமர்சனங்கள் அனைத்தையும் சரிகட்டியாக வேண்டும். கிருஷ்ணன் இச்சுமையை ஏற்றுக் கொண்டான். உலகச் சுமையானது கோவர்த்தனச்சுமையைவிட பன்மடங்கு கனமானது என்று எனக்கு அடிக்கடித் தோன்றியதுண்டு! உண்மையாகவே கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடி்தானா அல்லது மக்கள் அனைவரையும் பாதுகாப்பான ஓரடத்துக்கு அழைத்துச் சென்றானா என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. கிருஷ்ணன் மக்களின் மனதில் மாற்றம் விளைவித்தான் என்பதையே  இங்கு முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே சமூகச் சடங்குகளை ஒருவர் மாற்ற முற்பட்டால் பலதரப்பட்ட எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் எழக்கூடும். ஆனால் ஒரு பாலகனாக இருக்கும்போதே கிருஷ்ணன் இதனை சாதித்துக்காட்டினான். பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு இப்பண்பு இன்றியமையாதது-எவ்வளவுதான் பிறரின் ஏச்சையும் பேச்சையும் கேட்கவேண்டி வந்தாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளக்கூடாது. பொதுவாகவே குடும்பத்தலைவரின் வாதத்தை அவரது சம்பாத்தியத்தை நம்பி வாழும் குடும்பத்தினர் அனைவரும் ஏற்று நடப்பர். ஆனால் ஒரு சமுதாயத்தில், அதிலும் குறிப்பாக பதவி ஏதும் வகிக்காத ஒருவர் கூறுகிற வாதத்தை அனைவரும் ஏற்று நடக்க வேண்டிய தேவையே இல்லை. கிருஷ்ணன் அப்பேற்பட்டவன். 

ராமன் விமர்சனங்களால் வியசனமடைந்தான். வால்மீகி ராமனை 'துல்யநிந்தாஸ்துதீர்மௌனி' என குறிப்பிடுவதில்லை. ஆனால் கிருஷ்ணனோ தான் உரைத்த கீதை வரிகளான: "சீதோஷ்ண சுகதுக்கேஷு சம சங்கவிவர்ஜித:", என்பதற்கு ஒப்ப நடந்துகொண்டான். இது ஒரு மகத்தான சமூகப் பண்பாகும்.

பலதரப்பட்ட மக்களோடும் பழகி வருகிற ஒரு சமூகப் பிரதிநிதிக்கு பற்பல கலைகளில் உண்மையான ஆர்வம் வேண்டும். இது கிருஷ்ணனது வாழ்விலே கண்கூடாய் தெரிகிறது. ராமனுங்கூட ஒரு கைதேர்ந்த கலாரசிகன்தான். சொல்லப்போனால், 'ஆதிகவி' ராமனை பல கலைகள் கற்றுத் தேர்ந்தவன் என்றே குறிப்பிடுகிறார்.  ஆனால் இதனை ராமனின் வாழ்விலே நாம் கண்கூடாய் பார்ப்பதில்லை. கிருஷ்ணனின் வாழ்வின் பல தருணங்களில் கலைகளின் மீதான அவனுக்குள்ள ஈடுபாடு நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. அவன் சங்கீதமும், நடனமும் கற்றான். அவன் நண்பர்களுடன்கூட ஆடிப்பாடி மகிழ்ந்தான். தான் களிப்புறுவதெற்கென இவ்வனைத்தையும் அவன் கற்றுத் தேர்ந்தாலும், பிறருடன் உறவாடவும் அவன் அவற்றைப் பயன்படுத்தினான்.

சிவனுங்கூட ஒரு கைதேர்ந்த கலைநாயகன்தான்; அவன் ஆடுகிறான், பாடுகிறான், வாத்தியங்களை வாசிக்கிறான், மேலும் எல்லாவிதமான கலைகளையும் ரசித்து மகிழ்கிறான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனெனில் தனி மனித அளவிலான உச்சபட்ச ஆனந்தத்திற்கு கலைகள் வித்திடுகின்றன. ஆனால் கிருஷ்ணனோ இந்த கலை அம்சத்தை உலகத்தாருடன் உறவுகொள்ள பயன்படுத்தினான். காளிங்க நர்த்தனத்தின்போது தனியாக நின்று ஆடிய அவன், ராஸ லீலையின்போது எண்ணிறந்த கோபிகைகளுடன் இணைந்து ஆடினான். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். தனியாக ஆடத் தெரிந்த அவனுக்கு இலையுதிர்கால நிலவொளியில் ஆயிரம் பேருடன் இணைந்து ஆடவும் தெரிந்திருந்தது. புல்லாங்குழலூதி அவனால் அனைவரையும் வசியம் செய்ய முடிந்தது. ஆனந்தக் கொண்டாட்டத்துடன் அனைவரோடும் அளவளாவி, சமூகப் பணியை அதன் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்சென்றான் கிருஷ்ணன்.

அநியாயத்தைத் தட்டிக்கேட்பதென்பது பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவரது அத்தியாவசியப் பண்பாகும். இம்மாதிரி நிலைபாடுகொண்ட ஒருவரால் மட்டுமே பொதுவாழ்வில் நேர்த்தியாக ஈடுபட முடியும். அதர்மம் தலைதூக்கும்போது எவ்வித தயக்கமும் இன்றி அதனை எதிர்த்து நிற்க வேண்டும். சம்பிரதாயத்துக்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, அல்லது தயாளகுணத்தாலோ ஒரு தலைவன் ஒதுங்கி நிற்கலாகாது. கிருஷ்ணன் அநியாயத்தைத் தட்டிக்கேட்டான். அவன் ஒருநாளும் அதர்மத்துக்குத் துணைபோனதில்லை. எதிரில் நிற்பவர் எவராயினும் அவன் அதனை லட்சியம் செய்யவில்லை.

ராமன் மரியாதை நிமித்தமான விநயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தான். கைகேயி தசரதனிடத்தில் ராமனை காட்டுக்கு அனுப்புமாறு கூறுகையில் ராமன் மௌனம் சாதிக்கிறான். அவளை எதிர்த்து ராமன் மறுவார்த்தை ஏதும் பேசவில்லை. நினைத்திருந்தால் அவளிடம் ராமன், "இது என்ன முட்டாள்தனம்! நீங்கள் கூறுவதுபடி நான் நடந்துகொண்டால் என் தந்தை உயிர் துறப்பார். உமது புதல்வனும் உம்மை வெறுப்பான். இம்மாதிரி நடந்துகொள்ளாதீர்கள்!", என மறுமொழி கூறி இருக்கலாம். ஆனால் ராமன் ஒரு வார்த்தைகூட அவளை எதிர்த்துப் பேசவில்லை. இதே இடத்தில் கண்ணன் இருந்திருந்தால், அவன் கட்டாயம் மேற்கூரிய வசனங்களைப் பேசி இருப்பான்.

பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவர் எவ்வித பயமுமின்றி உண்மையையே பேச வேண்டும். முகத்தில் அறைந்தார்போல் அமைந்தாலும், அவருக்கு எது நல்லது எது கெட்டது என எடுத்துக்கூற தெரிந்திருக்க வேண்டும். சாந்தமாகக் கூறினாலும் கூட, கட்டாயம் உண்மையையே பேச வேண்டும். ராமனிடத்தே இவ்விஷயத்தில் சில தயக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுவிடாத வகையில் அனைவரையும் கையாள வேண்டும். குடும்பப்பிளவினை எளிதில் சரிகட்டிவிட முடியாது. ஆனால் ஒரு சமூகத்தில் இதைப் பற்றின கவலை எழுவதில்லை. உண்மையை உரைக்கும் பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு யாருடைய மனம் புண்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டியத் தேவை இல்லை; எப்படியும் அவர்களிருவரும் ஒரே கூறையின் கீழொன்றும் இருக்கப் போவதில்லையே! குடும்பம் என்று வருகையில் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். சமூகம் என்று வருகையில் பரிசோதனைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணன் இந்த கொள்கையை எவ்வாறு அவனது குடும்பத்திலும் புகுத்தினான் என்பதனை இனிவரும் அத்தியாயங்களில் காணலாம்.

தொடரும்…  

இந்த கட்டுரைத் தொடர் ‘ஷதாவதானி’ டாக்டர் ஆர். கணேஷ் அவர்கள் 2009இல் பெங்களூருவில் உள்ள கோகலே பொது விவகாரங்கள் நிறுவனத்தில் (Gokhale Institute of Public Affairs) நிகழ்த்திய கன்னட விரிவுரைகளின் ஹரி இரவிக்குமாரது ஆங்கிலத் தழுவலின் அடிப்படையில் எழுதப்பட்டது.  

இதில் இடம்பெற்றுள்ள இராமாயணக் குறிப்புகள் அனைத்தும் வித்வான் ரங்கநாத ஷர்மாவினது எட்டு தொகுதிகளாலான அவ்விதிகாசத்தின் கன்னட மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளன (இது பெங்களூருவிலுள்ள ராமாயண பிரகாஷான ஸமிதியின் வெளியீடு).

Author(s)

About:

Dr. Ganesh is a 'shatavadhani' and one of India’s foremost Sanskrit poets and scholars. He writes and lectures extensively on various subjects pertaining to India and Indian cultural heritage. He is a master of the ancient art of avadhana and is credited with reviving the art in Kannada. He is a recipient of the Badarayana-Vyasa Puraskar from the President of India for his contribution to the Sanskrit language.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.