பூர்வ பாகத்தில் ஒரு மனிதன் அடைய வேண்டிய உயர் பதவி சொர்க்கம் என்றும், அது வாழ்க்கை முடிந்தபின்பே சென்றடைய முடியும் என்றும் கூறுவதாக இந்த உபநிஷதம்[1] உரைக்கிறது. சொர்க்கம் சென்றவர்கள் துக்கமே இல்லாத நித்தியானந்த நிலையை அடைவார்கள் என்றும் கூறுகிறது. உத்தர பாகத்திலும் இதே கருத்து தெரிவிக்கப்படுவதாக போதிக்கும் அதே வேளையில், எல்லையற்ற ஆனந்தத்தை எங்கோ சொர்க்கபுரியில் சென்றடையாமல், நாம் பூலோகத்தில் வாழும்போதே அடைய முடியும் என்கிற உயர்ந்த கருத்தை இந்த உபநிஷதம் முன்வைக்கிறது. “மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் மறைந்துவிட்டால், ஒரு மனிதன் தான் இருக்கும் இடத்திலேயே அமரத்துவம் பெறுகிறான்[2]”, என்று இந்த உபநிஷதம் போதிக்கின்றது. இதன்மூலம், அனுமானம் கொண்டு ஊகித்த ஏதோ ஓர் இடத்தில் வாழ்வின் குறிக்கோளை சென்றடைய முடியும் என்ற கருத்தை தகர்த்து, நம் வாழ்நாளிலேயே அக்குறிக்கோளை எட்டிவிட முடியும் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சாக்ரடீஸ் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு தத்துவங்களை எடுத்து வந்தார் என்று பொதுவாகக் கூறுவார்கள்; உபநிஷத்தின் ஞானிகளோ, நம்மால் உணர மாத்திரம் முடிந்துவிட்டால், அந்த சொர்க்கமே இந்த பூமியில்தான் உள்ளது என்பதை கண்டறிந்தனர். தேச, கால, சூழலை மாற்றுவதால் மாத்திரம் வாழ்க்கை மாறி முற்று பெற்றுவிடாது. அனைத்துவிதமான குறுகிய கண்ணோட்டங்களையும் கடந்து அவற்றை தகர்த்தெறியும் மனப்பக்குவம் தேவை. புறச்சூழல் மாற்றத்தால் நிலை மாறாத அகச்சூழல் இது; அக நல்லிணக்கத்துக்கான ஆணிவேர். இலக்கின் தன்மையும் இப்போது மாறிவிட்டது. நான் கூறி இருந்ததைப்போல, இரண்டிலுமே நித்யானந்தம்தான்; எனினும் கூர்ந்து கவனித்தால், இவ்விரண்டிற்கான வித்தியாசம் புலப்படும். முன்னதில் “எல்லா துன்பங்களையும் விட்டுச் செல்வது[3]” இலக்கானது; பின்னதில் “சுகம், துக்கம் அனைத்தும் கடந்த நிலையாக[4]” இது விவரிக்கப்பட்டுள்ளது. “Sukhaṃ duḥkhasukhātyayaḥ” என்கிற பழமொழியில் உள்ளதுபோல, இயல்பாகவே முன்னதைவிட ஆழ்நிலையை பிரதிபலிப்பதால் பின்னதே சிறந்த இலக்காக விளங்குகிறது. உண்மையில், பொதுவாக குறிப்பிடுவதுபோல பேரானந்த நிலை மாத்திரமல்லாமல் இது ஒரு மாற்றமற்ற பேரமைதி நிலை[5].
ஒழுக்கநிலைகூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை எட்டி இருப்பதைக் காணலாம்; உங்கள்முன் ஓரிரு கருத்துக்களை மாத்திரம் முன் வைக்கிறேன். முன்னது, உயர்ந்த இலக்கை அடைவதற்கு வேத வேள்விகளை குறைவற செய்ய வேண்டும் என்கிறது. முதல் பார்வையில் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சுயநலத்துக்காக என்று தோன்றினாலும், சடங்குகளை செய்பவன் தானம், விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளை பெற்றிருக்க வேண்டும் என்று போதிப்பதால்[6] இதன் பரந்த நோக்கம் புரிகிறது. பொதுவாக, வேத வேள்விகளை ஒருவர் சொந்த நலம் கருதி செய்தாலும், அவர் முழு மனதோடு சமுதாயத்தினரோடு ஒத்து வாழ்ந்து தனது கடமைகளை குறைவின்றி செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த பண்பை இது போதிக்கின்றது. ஆக, சுயநலம் மற்றும் பொதுநலம் ஆகிய இரண்டும் கலந்த தன்மையை முதலாம் பூர்வ பாகம் போதிக்கிறது. இரண்டாம் உத்தர பாகத்தின் கொள்கையே வித்தியாசமானது. ஞான மார்க்கமே இலக்கை சென்றடைய சரியான வழி என்று இது போதிக்கிறது. எனினும், சடங்குகளின் துணைகொண்டே ஞான மார்க்கத்தை பின்பற்ற முடியும் என்பதையும் இது கருத்தில் கொண்டுள்ளது.[7] இச்சிறப்பியல்பை நமது இந்திய பண்பாட்டின் பரிணாம வளர்ச்சியில் காண முடியும். வளர்ச்சியின் ஒரு புது நிலையை எட்டியபோதும், பழையதை துறந்துவிடாமல் புதியதோடு அப்பழம்பண்பாடும் பின்னிப்பிணையப்பட்டிருக்கும். இந்த பழைமைவாதம்தான் நமது இந்திய கலாச்சாரத்தின் பலம். இதனால் பழைய அடையாளங்கள் இன்றியமையாத மாற்றம் பெறுகிறது. இங்கும் சடங்குகள் புதியதோர் அடையாளத்தை பெறுகின்றன. முதலாவதில் சடங்குகள் சுயநலம் பொதுநலம் ஆகிய இருநோக்கங்களையும் முன்வைக்கின்றது. பின்னதில், முன்பே கூறியிருந்த வேதவாக்கியத்தில் உள்ளதுபோல[8], சுயநலத்தை புறந்தள்ளிவிட்டு, ஆசையை முற்றிலுமாக துறக்கவே சடங்கு பயன்படுகிறது. சுயநலம் ஒதுக்கப்பட்டு பொதுநலம் போற்றப்படுவதை இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, சடங்கானது இங்கு ஒருவரது தனிப்பட்ட இச்சையை பூர்த்தி செய்வதற்கல்லாமல், எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு அவராற்றும் பணியால் அவரது அகத்தூய்மைக்கு (sattva-śuddhi) வித்திடுகிறது.
அதனால், உபநிஷத்துக்களை பொறுத்தவரையில் வாழ்வின் உயர் இலக்கு எல்லையற்ற அமைதியை பெறுவதே ஆகும். இதனை நாம் இவ்வுலகில் இருந்துகொண்டே பெற முடியும். இதனை பெறுவதற்கு சிறந்த வழி ஞானத்தால் உயர் உண்மையை உணர்ந்து, பற்றற பொதுநலம் பேணுவதே ஆகும். சங்கரர் தனது கீதை (2.55)[9] உரையில், இலக்கை எட்டிவிட்ட சித்தனது தன்மையும், அதனை அடைய விரும்பும் சாதகனது தன்மையும் ஒன்றே என்கிறார். பின்னவர்கள் முயன்று இத்தன்மையை பெறுகிறார்கள், முன்னவர்களோ இயல்பிலேயே இத்தன்மையை அடையப்பெற்றவர்கள். அதாவது, ஒரு சாதகன் தன் இலட்சியத்தை எட்டப் பயன்படுத்தும் வழிமுறையானது, இலக்கின் வெளிப்பாடாக ஒரு சித்தனிடத்தே அமைந்து விளங்குகிறது. இவ்விரண்டுக்குமான வித்தியாசம் இவ்வளவே என நாம் உணர்வோமாயின், இதே விதத்தில் ஒரு இலக்கின் தன்மையும் அதை சென்றடையும் வழிமுறையும் உண்மையான நேர்மையான ஆன்மீகப் பாதையின்பாலுள்ள தன்னலமற்ற ஈடுபாட்டுக்கு இணையெனக் கொள்ளலாம். இங்கு கூறப்பட்டுள்ள ஈடுபாடு முற்றிலும் சுயநலமற்றது. ஆக, ‘நியாயமான சுயநலத்துக்கோ’, ‘அறிவார்ந்த சுயநலத்துக்கோ’ இந்திய பண்பாட்டில் இடமில்லை. சுய இச்சைகள் மனதைக் குருடாக்கும் மாயவலைகள் என்ற நம்பிக்கை இங்கு காலூன்றி நிற்கிறது. மனித நேயம் பேணும் தன்னலம் பாராட்டாத அதன் தகைமையே தற்போது நிலவிவரும் சூழலில் இதனை உலகெங்கிலும் கொண்டு சேர்க்கப் போதுமானது. எது எப்படி இருந்தாலும், ஞானம் மற்றும் சேவை ஆகியவற்றை நோக்காகக்கொண்ட ஒரு கொள்கையின் உள்ளார்ந்த மதிப்பு உயர்வாகவே இருக்கக்கூடும். அதனால் நான் முன்பே கூறியதைப்போல, வரலாற்று சூழ்நிலைகள் மட்டுமல்லாமல், ஆழமான மதிப்பும் பெற்று விளங்குவதால் இவ்வடையாளம் மகத்துவம் வாய்ந்தது. ஆக இந்தியர்களாக நமது முதல் கடமை இதனை பேணிப் பாதுகாப்பது; அதனால், நம் அடையாளத்தை நமக்கு எடுத்துரைக்கும் நாம் அனைவரும் தற்போது கூடியிருக்கும் இதுபோன்ற வளாகங்களை பாதுகாப்பது அத்தியாவசியமாகிறது.
முற்றும்
மொழிபெயர்ப்பு: ஸ்ரீபிரியா ஸ்ரீநிவாசன்
This is the final part of a three-part Tamil translation of Prof. M Hiriyanna's "The Value of Sanskrit Learning and Culture" from his anthology Popular Essays in Indian Philosophy. Thanks to Shankar Venkataraman for his thorough review and valuable inputs.
அடிக்குறிப்புகள்
[1] Kaṭhopaniṣad 1.12–19.
[2] Kaṭhopaniṣad 6.14.
[3] Kaṭhopaniṣad 1.18.
[4] Kaṭhopaniṣad 2.12.
[5] இந்த உபநிஷத்தில் ஒரு வார்த்தை மாறுபாட்டுடன் மாத்திரம் அடுத்தடுத்து வருகிற ஒரே மாதிரியான இரு மந்திரங்கள் (5.12–13) இதனை மேலும் எடுத்துக் காட்டுகிறது. அதாவது இங்கு sukha என்பது śānti என வருகிறது.
[6] சங்கரர் 1.17யை காண்க. நித்ய கர்மாக்களான பஞ்ச மஹாயக்ஞங்களுடன் இதனை ஒப்பிடுக.
[7] Cf. Kaṭhopaniṣad 2.15 and 3.2.
[8] Kaṭhopaniṣad 6.14.
[9] இதனை Naiṣkarmya-siddhi 4.69 உடன் ஒப்பிடுக.