சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் உபநயனம்

This article is part 7 of 9 in the series உபநயனம்

அநேகமாக சூத்திர (Sūtra) காலத்தில்தான் உபநயனச் சடங்கு முழுதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடும்.[1] கிருஹ்ய சூத்திரங்களில் (gṛhya-sūtras) அச்சடங்கில் அரங்கேறும் பெரும்பாலான விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதனில் கூறப்பட்டுள்ள சடங்கே பிற்கால தர்ம சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளன; இச்சடங்கின் சமூகக் கண்ணோட்டத்தை பரைசாற்றுவதே அவற்றின் முதன்மை நோக்காக அமைந்தது. அநேகமாக இக்காலகட்டத்தில்தான் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உபநயனம் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டிருக்க வேண்டும். இச்சடங்கு அச்சிறுவனது இரண்டாம் பிறப்பைக் குறிக்கவல்லது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டு, அவனை ‘த்விஜன்’ (இருமுறை பிறந்தவன்) என்றழைக்கலாயினர். ‘த்விஜன்’ என்கிற இக்கருத்து உபநயனத்துக்கானது மாத்திரம் அல்ல, யக்ஞங்களைத் தொடங்கும்போதும் ஒருவன் ‘த்விஜன்’ என்றே கொள்ளப்படுகிறான்.[2]

வேத காலத்தில் ‘த்விஜன்’ என்பது ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கவே பயன்பட்டதே அன்றி சமூக அந்தஸ்தை அல்ல; மேலும் முதல் மூன்று வர்ணத்தார் அனைவருமே உபநயனம் செய்து கொள்ளவில்லை. ஒருவேளை சம்பிரதாய முறையில் கல்விப் பயிற்சி பெற விரும்பியோர் தாமாகவே முன்வந்து இதனை செய்து கொண்டிருக்கலாம். அநேகமாக, உபநயன சடங்கானது ஒருவரது ஆன்மீக மற்றும் கல்வி வேட்கையைக் குறிக்கவே பயன்பட்டிருக்கலாம். ஒரு பிரபல வாக்கியத்தில், தன் மகனான ஸ்வேதகேதுவிடம் (Śvetaketu) ஆருணி (Āruṇi) என்பவர், பிறப்பால் தமது குலத்தார் ஒருவரும் பிராம்மணராகிவிட முடியாது என்கிற காரணத்தால் கட்டாயம் மாணவனாகப் பயிற்சி பெற்றுத் தேர வேண்டும் என்று கூறுவதாக வருகிறது.[3]

சூத்திர (Sūtra) காலத்தில், உபநயனம் கட்டாயமாகிவிட்டது. வளர்ந்துவரும் எந்த சமுதாயத்திற்கும் கல்வி என்பது அவசியமான தேவை.[4] உலகியல் பாடங்களைக் கற்றுத் தேர உபநயனம் அவசியமானது.[5] கல்விகற்கும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. கல்வியில் புதுப்புதுக் கிளைகள் உருவாயின. அதனால் பொக்கிஷமான இவ்விலக்கியத்தைப் பேணிக் காக்க சமூகத்தார் அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்பட்டதால் உபநயனம் கட்டாயமாக்கப்பட்டது.[6]

உபநயனச் சடங்கைப் பற்றின[7] ஒரு சிறிய பதிவு இதோ[8]

சிறுவன் ஆசிரியரின் கரங்களைப் பற்றுகிறான். குருவானவர் அக்னியில் ஆஜ்யத்தை (ājya) (ஆட்டுப் பாலாலான தூய நெய்) ஆஹூதி இடுகிறார். அக்னி வலப்புறம் இருக்க, அவர் கிழக்கு நோக்கி அமர்கிறார். சிறுவன் ஆசிரியரை நோக்கி அமர்கிறான் (அதாவது மேற்கு நோக்கி). பிறகு ஆசிரியர் தமது மற்றும் அச்சிறுவனது மடிந்த கைகளில் நீரை நிரப்பிக்கொண்டு, “நாம் சாவித்திரியை தேர்வு செய்கிறோம்!”[9] என்ற வரியை ஓதுகிறார். தன் கரங்களிலுள்ள நீரினை சிறுவனது கரங்களிலுள்ள நீரின் மேல் இடுகிறார். இதன்பின் தமது கரத்தினால் கட்டைவிரலோடு கூடின சிறுவனது கரம்பற்றி, “சாவித்திரியின் கட்டளையால், இரு அஸ்வினி தேவதைகளின் கரங்களால், பூஷனது (Pūṣan) கைகளைக்கொண்டு, நான் உன் கரத்தைப் பற்றுகிறேன், ராகவனே!”[10] என்று கூறுகிறார். இரண்டாம் முறை அவன் கையைப் பற்றி, “ராகவனே! அக்னி உனது ஆசான்!” என்கிறார். அதன்பின் மூன்றாம் முறை தொடர்கிறார்.

சிறுவனை சூரியனைப் பார்க்கச் செய்து அவர் பின்வரும் மந்திரத்தை ஓதுகிறார் “சூரிய தேவதையான சாவித்திரியே! இது உனது பிரம்மசாரி! இவனை ரக்ஷி. இவன் மாண்டுவிடக் கூடாது!”[11] அதன்பின் அவர், “நீ யாருடைய பிரம்மசாரி? நீ பிராணனுடைய பிரம்மசாரி. யார் உன்னைத் தூண்டிவிடுகிறார்? நான் உன்னை ‘கா’வுக்கு (அதாவது, பிரஜாபதிக்கு) கொடுக்கிறேன்[12].” “நன்கு உடை அணிந்திருந்து அலங்கரிக்கப்பட்ட பாலகன் இங்கு வந்தான்,”[13] என்கிற அரை வாக்கியத்தைக் கூறி ஆசிரியர் அவனை வலப்பக்கம் திருப்புகிறார். பாலகனின் தோளிலே அவர் தமது இரு கைகளையும் வைத்து, அவனது இதயத்தில் கைவைத்து அவ்வரியின் மறுபாகத்தைக் கூறுகிறார்.[14] அக்னியை சுற்றியுள்ள நிலத்தை துடைத்துவிட்டு அப்பாலகன் மௌனமாக சமித்துக் கட்டைகளை அக்னியில் இடுகிறான் – ‘பிரஜாபதிக்கு உரித்தானதை அமைதியாகச் செய்ய வேண்டும்’ என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது, அதனால் இப்போது அந்த பாலகன் பிரஜாபதிக்கு உரியவன் ஆகிறான். “அக்னியாகிய ஜாதவேதனுக்கு நான் சமித்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; அக்னியே, இதன்மூலம் தாங்கள் விருத்தியடைவீர்கள், நாம் பிரம்மத்தை (வழிபட்டு) விருத்தியடைவோம், ஸ்வாஹா!” என்கிற மந்திரத்தை உச்சரித்தும் சமித்தை அக்னியில் இடலாம்.[15]

அதன்பின் அச்சிறுவன் மூன்று முறை அக்னியைத் தொட்டு, அவன் முகத்தில் தடவி,” நான் இப்பிரகாசத்தை ஏற்கிறேன்! அக்னி எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், பிரகாசத்தையும் வழங்கட்டும்! இந்திரன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், வீரியத்தையும் வழங்கட்டும்! சூரியன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், காந்தியையும் வழங்கட்டும்! அக்னியே! எது உன்னை பிரகாசிக்கச் செய்கிறதோ அது என்னையும் பிரகாசிக்கச் செய்யட்டும். அக்னியே! எது உனக்கு வீரியம் அளிக்கிறதோ அதன்மூலம் எனக்கும் வீரியம் கிட்டட்டும். அக்னியே! உனக்கு நுகர்வு சக்தி வழங்குவது எதுவோ, அது எனக்கும் நுகர்வு சக்தியை வழங்கட்டும்,” எனக் கூறுகிறான்.[16]

இம்மந்திரங்களை உச்சரித்து அக்னியை வணங்கியதும், அவன் தனது முட்டியை மடக்கி ஆசிரியரின் பாதம் தொட்டு,”சாவித்திரியை போதியுங்கள், ஆசானே, போதியுங்கள், ஆசானே!” என்கிறான். சிறுவனது கரங்களை அவனது மேலாடையோடுகூட பற்றி ஆசிரியர் சாவித்திரியை முதலில் ஒவ்வொரு பாதமாகவும், பிறகு ஒவ்வொரு அரைவரிகளாகவும், இறுதியில் வரி முழுவதையும் அவனுக்கு போதிக்கிறார். தம்மால் இயன்ற அளவு, ஆசிரியரானவர் காயத்ரி மந்திரத்தை மீண்டும் மீண்டும் மாணவனை ஓதச் செய்ய வேண்டும்.

தமது விரல்களை மாணவனது இதயத்தில் தலைகீழாக வைத்து, “நான் உன் இதயத்தைத் தொட்டு[17], எனக்கு பணிவிடை செய்யுமாறு ஆக்ஞாபிக்கிறேன். உனது எண்ண ஓட்டம் எனது எண்ண ஓட்டத்தைத் தொடரட்டும்! எனது வார்த்தைகளுக்கு ஒரு மனதாக நீ கட்டுப்படுவாய்! பிருஹஸ்பதி உன்னை எனக்கென நியமிக்கட்டும்!” எனக் கூறுகிறார்.

மேகலையை அவனுக்குச் சாத்தி, தண்டத்தை வழங்கியதும் பிரம்மசரிய மார்க்கத்துக்கான விதிமுறைகளை அவனுக்கு போதிக்கிறார்[18] – “நீ ஒரு பிரம்மசாரி. நீர் அருந்து, பணிவிடை செய், பகலில் உரங்காதே, குரு மீது முழு நம்பிக்கை வைத்து வேதங்களைப் பயில்வாய்.” காலையிலும், மாலையிலும் உணவுக்காக மாணவன் பிச்சை எடுக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் ஒரு சமித்துக் கட்டையை அவன் அக்னியில் இட வேண்டும். தான் எவற்றை எல்லாம் பிச்சை எடுத்துப் பெற்றான் என்பதை தனது ஆசிரியருக்குத் தெரியப்படுத்த வேண்டும். மீதமுள்ள நாள் முழுதும் அமராமல் நின்றுகொண்டே அவன் இருக்க வேண்டும்.[19]

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

அடிக்குறிப்புகள்

[1] HS, பக்கங்கள் 114–15

[2] Ajāto ha vai tāvatpuruṣo yāvanna yajate. – Jaiminī-upaniṣad-brāhmaṇa 3.14.8

[3]Śvetaketo vasa brahmacaryaṃ na vai somyāsmatkulīno’nanūcya brahmabandhuriva bhavatīti. – Chāndogyopaniṣad 6.1.1

[4] HS, பக்கங்கள் 122–23

[5] இன்றும்கூட உலகிலுள்ள பல அரசாங்கங்கள் பொதுக்கல்வி திட்டத்தை உருவாக்கப் போராடி வருகின்றன

[6] Altekar, A S. Education in Ancient India. Benares: Nand Kishore & Bros., 1944. பக்கங்கள் 11–12.

[7] Āśvalāyana-gṛhya-sūtra விலிருந்து

[8] HDS, பக்கங்கள் 281–83

[9] Tat saviturvṛṇīmahe vayaṃ devasya bhojanam. Śreṣṭhaṃ sarvadhātamaṃ turambhagasya dhīmahi.Ṛgveda-saṃhitā 5.82.1

[10] Vājasaneyi-saṃhitā 2.11, Taittirīya-saṃhitā 2.6.8.6

இதேபோன்ற வரி Āpastamba-mantra-pāṭha 2.3.24 மற்றும் 2.9.5 ஆகியவற்றிலும், Hiraṇyakeśi-gṛhya-sūtra 1.11.17, Mānava-gṛhya-sūtra 1.22.5, Baudhāyana-gṛhya-sūtra 2.5.28, மற்றும் Kāṭhaka-gṛhya-sūtra 41.16 ஆகியவற்றிலு6ம் வருகின்றது

[11] Deva…mā mṛta. இந்த மந்திரம் Āpastamba-mantra-pāṭha 2.3.31 வின் ஏகாக்னிகாண்டத்திலும் (Ekāgni-kāṇḍa)—Asāveṣa te deva sūryabrahmacārī tai goṃpāya sa mā mṛtaiṣa rta sūrya putrassudīrghāyussa mā mṛta—மேலும் Mānava-gṛhya-sūtra 1.22.5, Śāṅkhyāyana-gṛhya-sūtra 2.18.4 ஆகியவற்றிலும், மற்றும் பிறவற்றிலும் வருகின்றது

[12] Kasya…paridadāmi என்கிற சொற்கள் Āpastamba-mantra-pāṭha 2.3.29, Mānava-gṛhya-sūtra 1.22.5, மற்றும் Pāraskara-gṛhya-sūtra 2.2 (சிற்சில வேறுபாடுகளுடன்) ஆகியவற்றில் வருகின்றது

[13] Yuvā suvāsāḥ parivīta āgāt sa u śreyān bhavati jāyamānaḥ…Ṛgveda-saṃhitā 3.8.4

[14] …taṃ dhīrāsaḥ kavaya unnayanti svādhyo manasā devayantaḥ. – Ṛgveda-saṃhitā 3.8.4

[15] Agnaye samidhamāhārṣaṃ &c. – முதல் பாதி Āpastamba-mantra-pāṭha 2.6.2, Pāraskara-gṛhya-sūtra 2.4.3, Hiraṇyakeśi-gṛhya-sūtra 1.7.2, Gobhila-gṛhya-sūtra 2.10.46, மற்றும் Bhāradvāja-gṛhya-sūtra 1.8 ஆகியவற்றில் வருகின்றது. இவ்வனைத்தும் ‘Yathā tvamagne samidhā samidhyase evaṃ māmāyuṣā...medhayā prajayā&c. போன்ற நீண்ட பின் பாதி கொண்டவை

[16] Mayi medhāṃ &c. இம்மந்திரங்கள் Taittirīya-saṃhitā 3.3.1.2 மற்றும் 3.5.3.2 ஆகியவற்றிலும், மேலும் Hiraṇyakeśi-gṛhya-sūtra, Baudhāyana-gṛhya-sūtra 2.5.62 &c ஆகியவற்றிலும் வருகின்றன

[17] Mama vrate &c. அந்த சொற்கள் Pāraskara-gṛhya-sūtra 2.2, Mānava-gṛhya-sūtra 1.22.10, Hiraṇyakeśi-gṛhya-sūtra (இங்கு mama hṛdaye என்றிருக்கிறது) ஆகியவற்றிலும் உள்ளன. கலியாண சடங்கிலும் (கணவன் உச்சரிக்கும் சொற்களாக) இவை வருகின்றன; Pāraskara-gṛhya-sūtra 1.8 யைக் காண்க

[18] Brahmacāryasi &c. இச்சொற்கள் (கூட சில சொற்கள் சில சேர்க்கப்பட்டும் நீக்கப்பட்டும்) Āpastamba-mantra-pāṭha 2.6.14, Pāraskara-gṛhya-sūtra 2.3, Kāṭhaka-gṛhya-sūtra 41.17 ஆகியவற்றிலும், இன்னும் பிறவற்றிலும் வருகின்றன. முன்பே குறிப்பிட்டிருந்த Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17 வின் பத்தியின் அடிப்படையில் அமைந்தவை இவை. சிலவற்றில் ‘தூங்காதே’ போன்ற எளிய வாக்கியங்களே உள்ளன-இதனை Āpastamba-dharma-sūtra 1.1.4.28, ‘Atha yaḥ pūrvotthāyī jaghanyasaṃveśī tamāhurna svapitīti’ என்று விளக்குகின்றது

[19] Anupravacanīya சடங்கை வேதத்தின் ஒரு பாகத்தை கற்ற பின்பே செய்ய வேண்டும்; Āśvalāyana-gṛhya-sūtra 1.22.10–16, Gobhila-gṛhya-sūtra 3.2.46–47 ஆகியவற்றைக் காண்க

Author(s)

About:

Hari is a writer, translator, violinist, and designer with a deep interest in Vedanta, Carnatic music, education pedagogy design, and literature. He has worked on books like The New Bhagavad-Gita, Your Dharma and Mine, Srishti, and Foggy Fool's Farrago.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.