உபநயனம் – சமஸ்காரங்களின் அறிமுகம்

This article is part 2 of 8 in the series உபநயனம்

ஒவ்வொரு சமூகமும் அவர்கள் வாழும் அந்தந்த தேசகாலங்களுக்கு தகுங்தாற்போல வாழ்வின் முக்கியமான கட்டங்களை தேர்வு செய்து கொள்கின்றன. ஒருவரது வாழ்க்கைப் பயணம் என்பது அவர் பிறப்புக்குமுன் தொடங்கி, வாழ்நாள் முழுதும் தொடர்ந்து, மரணித்த பின்பு வரையுங்கூட தொடர்கிறது என்பதே அனைவருக்கும் பொதுவான விதி.

தமக்கென சந்ததி வேண்டும் என ஒரு தம்பதி கருதுவதால், கருவாக ஒரு குழந்தை உதயமாகிறது. கருத்தரித்தபின் ஊசிநுனியைவிட பதினைந்து மடங்கு அளவு குறைவிலான, ஒரு அங்குலத்தின் இருநூறு பங்கிலான, மிகச்சிறிய மையக்கரு ஒன்று உருவாகிறது (இதனை ‘கருமுட்டை’ அல்லது ‘நுகம்’ என்பர்). ஒன்பது மாதங்கள் தாயின் கருப்பையில் வளர்ந்தபின் (இதனை நாம் ‘கர்ப்ப காலம்’ என்றழைக்கிறோம்) குழந்தையாக வெளிவருகிறது. இக்காலம் முழுதும் அக்குழந்தை தாயின் உடலில் மட்டுமல்லாது, அவரது சுற்றத்தார், நண்பர்கள், பெற்றோர் போன்ற அனைவரது உள்ளத்திலும் உயிர்ப்புடன் வாழ்கின்றது.

நாளடைவில் அந்த குழந்தை வளர்ந்து, கல்வி கற்று, வயதுக்கு வந்து, சம்பாதித்து, தாம்பத்திய வாழ்வில் புகுந்து, குழந்தைப்பேறு பெற்று, தொழில் புரிந்து, பதவி ஓய்வு பெற்று, மூப்பெய்தி, மரணிக்கிறது. உடலளவில் மரணித்திருந்தாலும், பிறர் உள்ளத்தில் நிலைத்திருக்கும் வரையில் அவனுக்கோ அல்லது அவளுக்கோ  மரணம் என்பது இல்லை.

மனித வாழ்வின் முக்கியமான தருணங்களாக பதினாறு முக்கியமான கட்டங்களை அடையாளம் கண்டுகொண்டனர் நம் முன்னோர். இவ்வனைத்தையும் கொண்டாடி களித்து மகிழ ‘சடங்குகள்’ பலவற்றை ஏற்பாடு செய்தனர். இவற்றைத் தவிர, ஒருவரது மரணத்துக்கு பின்பும் அவரது ஞாபகார்த்தமாக,  வருடாந்திரம் ‘சிரார்த்தம்’ (śrāddha) என்கிற சடங்கை நடத்த வழிவகை செய்தனர்.

இப்பதினாறு முக்கியமான கட்டங்களை—சடங்குகளின் அணிவகுப்பை—நாம் ‘சமஸ்காரங்கள்’ (‘saṃskāras’) என்றழைக்கிறோம். பல்வேறு சிந்தனையாளர்கள் வெவ்வேறு எண்ணிக்கையில்—கிட்டத்தட்ட நாற்பது[1] சமஸ்காரங்கள் வரை—இவற்றைத் தொகுத்துள்ளனர். எனினும் இவற்றுள் பொதுவாக பதினாறு சடங்குகளை மாத்திரமே குறிப்பாகக் கருத்தில் கொள்கிறோம்.

நமது பண்பாட்டில் இந்த சடங்குகளைத் தவிரவும், நமது வாழ்வை நான்கு பரந்த நிலைகளாக (caturāśramas) பிரித்துக் கொள்கிறோம். இவை – i. பிரம்மசார்யம் / brahmacarya (மாணவன்), ii. கார்ஹஸ்த்யம் / gārhastya (குடும்பத்தலைவன்), iii. வானபிரஸ்தம் / vānaprastha (சமூக வாழ்விலிருந்து ஓய்வு), மற்றும் iv. சன்னியாசம் / saṃnyāsa (உலக இன்பங்களிலிருந்து முற்றிலுமாக விலகி வாழ்தல்). சமஸ்காரங்களில் பெரும்பாலானவை இவற்றின் முதல் இரண்டு நிலைகளிலேயே அடங்கிவிடும்.

பதினாறு சமஸ்காரங்கள் ஆவன:

1. கர்பாதானம் / Garbhādhāna (குழந்தை உருவாவது கொண்டாடப்படுகிறது)

மனைவி தனது கணவனை வரவேற்று தன்னுடன் இணைந்து, நல்மகவைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறாள்.

2. பும்ஸவனம் / Puṃsavana (ஆண்மகவிற்காக வேண்டுதல்[2])

தன் மனைவி கருவுற்றிருப்பதை அறிந்த கணவன் குழந்தையின் நல்வளர்த்திக்காக பிரார்த்தித்து, பிரத்தியேகமான உணவை அவளுக்குப் பரிமாறுகிறான். இந்த saṃskāraத்தின் தாத்பர்யம் கருவில் வளரும் குழந்தையை தூய்மைப்படுத்துவதாகும்.

3. சீமந்தோந்நயனம் / Sīmantonnayana (வளைகாப்பு)

மாதம் நெருங்கிவர, கர்ப்பவதியான பெண்ணை உற்சாகப்படுத்த அவளது உற்றார் உறவினர் அனைவரும் இணைந்து செய்கிற சடங்கு. இச்சடங்கின்போது, கர்ப்பவதியின் கூந்தலை நேர் வகிடிட்டு அவள் கணவன் பிரிக்கிறான்.

4. ஜாதகர்மம் / Jātakarma (பிள்ளைப்பேற்றைக் கொண்டாடுதல்)

குழந்தை பிறந்தவுடன், இவ்வுலகில் அதன் வரவைக் கொண்டாடுவது. இதில் தாய்ப்பாலைப் பருகுவதைப்போல உண்மையைப் பருகுவதற்கு வேண்டி குழந்தையின் காதில் அதன் தந்தை மந்திரம் ஓதுகிறான்.

5. நாமகரணம் / Nāmakaraṇa (பேரிடுதல்)

குழந்தைப் பிறந்து பத்து அல்லது பதினோரு நாட்களான பின் உற்றார் உறவினரை அழைத்து, அதன் பெயர் முறையாக அறிவிக்கப்படுகிறது.

6. நிஷ்கிரமணம் / Niṣkramaṇa (முதல் பயணம்)

மூன்று அல்லது நான்கு மாதங்களான பின் குழந்தையை வீட்டிலிருந்து முதன்முதலாக வெளியே அழைத்துச் சென்று சூர்யோதயத்தையோ அல்லது சூர்யாஸ்தமனத்தையோ அதற்கு காண்பிப்பது வழக்கம்; ஒரு சிலர் கோவிலுக்கும் அழைத்துச் செல்வார்கள்.

7. அன்னப்ராசனம் / Annaprāśana (முதல் உணவு)

ஆறு மாதங்களுக்குப்பின், பால் பற்கள் முளைத்ததும் முதன்முதல் திட உணவு குழந்தைக்கு வழங்கப்படுகிறது.

8. கர்ணவேதம் / Karṇavedha (காது குத்தல்)

ஏழு மாதங்களானதும், குழந்தைக்கு காதுகுத்தும் சடங்கு நடைபெறுகிறது. மகிழ்ச்சிகரமான செய்திகளையே கேட்கப் பிரார்த்தித்து இது நடத்தப்படுகிறது.

9. சூடாகரணம் / Cūḍākaraṇa (மொட்டையடித்தல்)

ஓராண்டானதும், குழந்தைக்கு முடி வெட்டி, நகம் களையப்படுகிறது. தனிமனித சுகாதாரத்தைப் பேண இச்சடங்கு நடைபெறுகிறது.

10. வித்யாரம்பம் / Vidyārambha (கல்வித் தொடக்கம்)

குழந்தைக்கு ஐந்து வயதானதும், அவளுக்கு அக்ஷரங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இதன்போது கல்விக் கடவுளான சரஸ்வதியையும், பல இந்துக்களின் முதற்கடவுளான தடங்கல்களைப் போக்கும் விநாயகனையும் வழிபடுவார்கள் சிலர்.

11. உபநயனம் / Upanayana (பாடசாலைக்குள் பிரவேசம்)

எட்டு வயதானதும், பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரம் ஓதப்படும். இதுவே முறையான கல்வியில் அவன் காலடி எடுத்து வைப்பதற்கான முதற்கட்டம்.

12. வேதாரம்பம் / Vedārambha (வேதங்களில் அறிமுகம்)

வேத பாடசாலைகளுக்குள் நுழைய விரும்புகிற மாணவருக்கு இச்சடங்கு(பொதுவாக குருவுடன் இணைந்து செய்யப்படுகிற சடங்கு) வேத நூல்களை அவன் பயில்வதற்கான முதற்கட்டமாக அமைகிறது. வேதங்கள் பயிலாதவர்க்கும் பாடசாலை பிரவேசத்திற்கான வேறு வகை சடங்குகள் நடத்தப்பட்டன.

13. கேஷாந்தம் / Keśānta அல்லது ரிதுசுத்தி / Ṛtuśuddhi (பருவமடைதல்)

ஆண்களானால் அவர்கள் முகத்திலுள்ள முடி அகற்றப்படும் சடங்கு; பெண்களானால் அவர்கள் பூப்படைந்ததும் செய்யப்படுகிற சடங்கு.

14. சமாவர்த்தனம் / Samāvartana (பட்டம்)

குருவுடன் தங்கி பன்னிரண்டு ஆண்டு காலம் கல்வி கற்கிறான். கற்றுத் தேர்ச்சி பெற்றதும் அவனுக்கு சம்பிரதாய நீராட்டச் சடங்கொன்று நடைபெறுகிறது.

15. விவாஹம் / Vivāha (திருமணம்)

ஆணும், பெண்ணும் இணைவதற்கான சடங்கு. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ற வகையில் இது நடைபெறும். நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் உட்பட எட்டு வகையான திருமணங்கள் பழக்கத்தில் உள்ளன.

16. அந்த்யேஷ்டம் / Antyeṣṭi (மரணித்தபின் நடத்தப்படும் சடங்கு)

ஒருவர் மரணித்தபின், பொதுவாக விரகுக் கட்டையில் வைத்து அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இறந்தபின் சில நாட்கள்வரை சடங்குகள் நடைபெறும்.

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பல கருத்துக்கள் டாக்டர் பாண்டுரங் வாமன் கானே[3] அவர்களது ஐந்து தொகுதிகளிலான ‘History of Dharmaśāstra[4] (தரும சாஸ்திரத்தின் வரலாரு) என்கிற நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ளவை. இக்கட்டுரைக்கான மற்றொரு முக்கியமான நூல் டாக்டர் ராஜ்பலி பாண்டேவுடைய[5] Hindu Saṃskāras (இந்து சமஸ்காரங்கள்)[6].

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது "Upanayana – A Gentle Introduction" என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அடிக்குறிப்புகள்

[1] Gautama-dharma-sūtra 1.8.14–22வில் கூறப்பட்டுள்ள நாற்பது சமஸ்காரங்கள் – Garbhādhāna, Puṃsavana, Sīmantonnayana, Jātakarma, Nāmakaraṇa, Annaprāśana, Caula, Upanayana; Prājāpatya-vrata, Saumya-vrata, Āgneya-vrata, மற்றும் Vaiśvadeva-vrata (நான்கு Vedādhyayana vratas); Snāna, Sahadharmacāriṇīsaṃyoga (அதாவது  Vivāha); Brāhma-yajña, Deva-yajña, Pitṛ-yajña, Bhūta-yajña, மற்றும்  Manuṣya-yajña (ஐந்து mahā-yajñas); Aṣṭakā, Pārvaṇa, Śrāddha, Śrāvaṇī, Āgrahāyaṇī, Caitrī, மற்றும் Āśvayujī (ஏழு pāka-yajñas); Agnyādheya, Agnihotra, Darśapūrṇamāsa, Āgrayaṇa, Cāturmāsya, Nirūḍhapaśubandha, மற்றும் Sautrāmaṇī (ஏழு haviryajñas); Agniṣṭoma, Atyagniṣṭoma, Ukthya, Ṣoḍaśī, Vājapeya, Atirātra, மற்றும் Aptoryāma (ஏழு soma-yajñas). Antyeṣṭi இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[2] அக்கால சமுதாயம், உயிரியல் காரணங்களுக்காக ஆண் மகவை பிரதானமாக ஒருவேளை கருதி இருக்கலாம். நாளடைவில், பெண்களின் பங்களிப்புக்கு சமுதாயம் அங்கீகாரம் வழங்கத் தொடங்கியது. பொதுவாக இந்து சமுதாயம் பெண்களை (ஆண்களையுங்கூட) கருணையுடன் நடத்தியது. மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளை ஒப்பிடும்போது, நமது இந்திய சமுதாயம் பெண்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தது என்பது தெள்ளத்தெளிவாகும். இருப்பினும் இச்சமூகத்தில் ஓட்டைகளே இல்லை என முற்றிலுமாகக் கூறிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில் சொல்வது வேறாகவும் செய்வது வேறாகவும் அமைந்துவிடுகிறது.

[3] மஹாமஹோபாத்யாய (Mahāmahopādhyāya) டாக்டர் பாண்டுரங்க் வாமன் கானே (1880–1972) ஒரு வழக்கறிஞர், அறிஞர், எழுத்தாளர், மற்றும் பன்மொழியாளர்; மேலும் இவர் இந்திய சட்டம், கலாச்சாரம், அரசியல், மதம், பொருளாதாரம், கவிதை,வரலாறு உள்ளிட்ட பல துறைகளில் நிபுணர். ஐந்து தொகுதிகளிலான இவரது History of Dharmaśāstra (தரும சாஸ்திரத்தின் வரலாரு) ஆறாயிரம் பக்கங்களுக்கும் மேலான ஒரு அபாரமான படைப்பு. 1963யில் இந்திய அரசாங்கம் இவருக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது.

[4] Kane, Pandurang Vaman. History of Dharmaśāstra. Vol. II, Part 1. Poona: Bhandarkar Oriental Research Institute, 1941 (HDS என குறிக்கப்படுகிறது)

[5] டாக்டர் ராஜ்பலி பாண்டே (1907–71) ஒரு பேராசிரியர், அறிஞர் மற்றும் எழுத்தாளர். இவர் பண்டைய இந்தியர்களின் சமூக-மத வாழ்க்கையைக் குறித்து விஸ்தாரமாக எழுதியுள்ளார்.

[6] Pandey, Rajbali. Hindu Saṃskāras: Socio-Religious Study of the Hindu Sacraments. New Delhi: Motilal Banarasidass, 1969 (HS என குறிக்கப்படுகிறது)

Author(s)

About:

Hari is a writer, translator, violinist, and designer with a deep interest in Vedanta, Carnatic music, education pedagogy design, and literature. He has worked on books like The New Bhagavad-Gita, Your Dharma and Mine, Srishti, and Foggy Fool's Farrago.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.