உபநயனம் – சமஸ்காரம் என்ற சொல்லுக்கான வரையறை

This article is part 3 of 9 in the series உபநயனம்

‘சமஸ்காரம்’ (‘saṃskāra’) என்கிற வார்த்தைக்கு இணையான பொருள் ஆங்கிலத்தில் ஒன்றுமில்லை; அதற்கு ‘மெருகேற்றும்,' ‘வளர்த்தல்,' ‘பூரணத்துவம்,’ ‘அலங்கரித்தல்,’ ‘நியமனம்,’ ‘கல்வி,’ ‘நேர்மறை மாற்றம்,’ ‘பூர்வகர்மவினை’ உள்ளிட்ட பல அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக இது ‘நன்மை செய்தல்’ அல்லது ‘தேவையற்றதை விலக்கி, இருப்பதை மெருகேற்றுவதை’ குறிக்கும்.

“இலக்கியரீதியாக பார்த்தால் ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தைக்கு ‘நல்லதைச் செய்தல்’ என்று பொருள் கூறலாம். ஒரு கைதேர்ந்த சிற்பி வெறும் கல்லை ‘சமஸ்கார’த்திற்கு உட்படுத்தும்போது அது அற்புதமான சிற்பமாக உருமாறுகிறது. அதேபோல அரிசி, சர்க்கரை, பால் போன்ற பதார்த்தங்களை ஒன்று திரட்டி ஒரு சிறந்த சமையற்காரன் ருசிகரமான பாயசத்தைத் தயார் செய்கிறான்,” என்று ஸ்வாமி ஹர்ஷானந்தா கூறுகிறார். மேலும் அவர் ‘கல்,’ ‘அரிசி-சர்க்கரை-பால்’ ஆகிய அடிப்படை சாதனங்கள் ‘ப்ரக்ருதி’ (‘prakṛti’) என்பதை விளக்குகிறார். அதே கற்கள் உடைந்துவிட்டாலோ, அரிசி கெட்டுவிட்டாலோ அல்லது பால் திரிந்துவிட்டாலோ இதே பதார்த்தங்கள் எவ்வாறு சிதைக்கப்பட்ட ‘விக்ருதி’ (‘vikṛti’) ஆகிவிடுகின்றன என்பதையும் விளக்குகிறார்- ஒன்றுக்கும் பிரயோஜனப்படாமல் வீணாகிவிடுகின்றன. “நமக்குத் தேவை ‘சமஸ்க்ருதி’ (‘saṃskṛti’), ‘விக்ருதி’ அல்ல. ‘ப்ரக்ருதி’யை ‘சமஸ்க்ருதி’யாக மாற்றிவிடுகிற ‘சமஸ்கார’மே இங்கு தேவை, (உருச்சிதைந்து) விகாரமாக மாற்றிவிடுபவை அல்ல.”[1]

‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தைக்கு குறிப்பிட்ட சில வரையறைகளை பண்டைய நூல்களும், வித்வான்களும் நமக்கு வழங்கியுள்ளன(ர்).[2] வேதங்களில் ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தை அவ்வளவாக வருவதில்லை. எனினும் அதனை ‘சமஸ்க்ருத’ (‘saṃskṛta’), ‘சமஸ்க்ருதத்ர’ (‘saṃskṛtatra’) போன்ற வெவ்வேறு வடிவங்களில் காண்கிறோம்.[3] ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தைக்கான பிற அர்த்தங்கள் – ‘யக்ஞங்களினால் தூய்மை படுத்தும் செயல்,’[4] ‘ஒருவரின் ஆளுமையை அலங்கரிப்பது,’[5] ‘ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தயார் படுத்தும் செய்கை,’[6] ‘கறைகளை அகற்றி, தூய குணங்களை அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சடங்குகள் மற்றும் செயல்கள்.’[7]

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகளை மேற்கொள்வதால் ஒருவரது தேகத்திலோ அல்லது ஆத்மாவிலோ குடிகொள்ளும் விசித்திரமான சிறப்பம்சங்களையும் நாம் ‘சமஸ்காரம்’ எனலாம்.[8] இது இருவகைப்படும் – ஒன்று, ஒரு மனிதனை பல செயல்களைச் செய்யத் தகுதிபடுத்துபவை (உ.ம். உபநயனம் – வேதநூல்களைக் கற்பதற்கான தகுதியை வழங்குகிறது). மற்றொன்று, களங்க நிவர்த்திக்காக செய்யப்படுபவை (உ.ம். ஜாதகர்ம – கருப்பை மற்றும் விந்தினால் ஏற்பட்ட களங்கத்தை நிவர்த்தி செய்வதற்காக செய்யப்படும் சடங்கு).[9]

சமஸ்காரங்களின் நோக்கம் குறித்தோ அல்லது அதன்மூலம் எவ்வாறு ஒருவருக்கு ஆளுமை வாய்க்கிறது என்பதைக் குறித்தோ நமது புராதன நூல்கள் ஏதும் அவ்வளவாக எடுத்து விளக்குவதில்லை. எனினும் ஒருவரை வாழ்வின் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்லும் ‘சடங்குகளாக’ இவை கருதப்பட்டு வந்தன. மனித வளர்ச்சிக்கு இவை அத்தியாவசியமென தொன்றுதொட்ட காலம் முதல் கருதப்பட்டு வந்தன. அந்தரங்க மாற்றத்தை வெளிப்படை குறியீடுகளால் உவமைப்படுத்தி, உண்மை உலகுக்கு ஒருவரைத் தயார்படுத்தும் சடங்குகள் இவை. சமஸ்காரங்களை[10] வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டால் ஒருவரது தனிநபர் அந்தஸ்தும் உயர்ந்துவிடுகிறது.

சில சமஸ்காரங்கள் பிறவற்றைக்காட்டிலும் முக்கியம் என கொள்ளப்பட்டன – குறிப்பாக உபநயனம், விவாகம் போன்றவை. “உபநயனம் ஆன பிறகு வேதம் பயின்று, தார்மீகக் கடன்களை சரிவரச்செய்து, அதனால் சமூகத்தில் தமது அந்தஸ்து உயரப்பெற்று, ஆன்றோருடன் பழக சந்தர்ப்பங்களும் வாய்த்துவிடுவதால் ஒரு சராசரி மனிதனை இது போன்ற சடங்குகள் ஆன்மீகரீதியிலும், சமூக ரீதியிலும் உயர்த்திவிடுகின்றது. மேலும், தாம் ஒரு புது பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளபடியால் அதில் கூறப்பட்டுள்ள விதிகளை ஏற்று சரிவரச் செய்ய வேண்டும் என்ற மானசீக உந்துதலும் அவருக்கு ஏற்பட்டுவிடுகின்றது,” என்று மஹாமஹோபாத்யாய டாக்டர் பா வா கானே அவர்கள் கூறுகிறார்.[11]

 

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

அடிக்குறிப்புகள்

[1] Harshananda, Swami. Upanayana: Sandhyāvandana and Gāyatrīmantrajapa. சென்னை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்.

[2] புராதனமான நூல்களின் அடிப்படையிலேயே டாக்டர் கானே அவர்கள் ‘saṃskāra’ என்ற வார்த்தையை விளக்குகிறார். HDS, பக்கங்கள் 190-92யைப் பார்க்க.

[3] உதாரணத்துக்கு, Ṛgveda-saṃhitā 5.76.2 (saṃskṛtam), 6.28.4 (saṃskṛtatram), 8.33.9 (saṃskṛtaḥ) முதலானவற்றைப் பார்க்கவும்.

[4] இது ஜைமினியின் விளக்கம். ‘சமஸ்காரம்’ என்கிற வார்த்தையை நாம் குறிப்பாக Pūrva-mīmāṃsā-sūtraத்தில் காண்கிறோம் (3.1.3; 3.2.15,17; 3.8.3; 9.2.9,42,44; 9.3.25; 9.4.33, 9.4.50,54; 10.1.2,11 முதலானவை). ஜைமினியின் Pūrva-mīmāṃsā-sūtra, ஆஸ்திக தர்சனங்களில் ஒன்றான பூர்வ மீமாம்சத்தை வரையறுக்கிறது.

[5] இது பாணினி(Pāṇini)யின் விளக்கம் – sampari upebhyaḥ karotau bhūṣaṇeAṣṭādhyāyī 6.1.137. பாணினி, கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத இலக்கணநூல் வல்லுநர்; மாமேதையான இவரை மொழியியலின் தந்தை என்றேகூட குறிப்பிடலாம்.

[6] இது சபர(Śabara)ரின் விளக்கம்: saṃskāro nāma sa bhavati yasmiñjāte padārtho bhavati yogyaḥ kasyacidarthasyaPūrva-mīmāṃsā-sūtra 3.1.3 (பக்கம் 660)விற்கான சபரரின் வர்ணனை இது. சபர-ஸ்வாமின் (Śabara-svāmin), கிமு ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி. ஜைமினியின் Pūrva-mīmāṃsā-sūtraக்கு இவர் விளக்கவுரை இயற்றியுள்ளார். மேலும் காண்க:

குமாரில-பட்ட(Kumārila-bhaṭṭa)ரின் yogyatāṃ cādadhānāḥ kriyāḥ saṃskārā ityucyanteTantra-vārtika, பக்கம் 1078.

Vedānta-sūtra 1.1.4க்கான சங்கரரின் விளக்கம் – saṃskāro hi nāma saṃskāryasya guṇādhānena vā syāddoṣāpanayanena vā.

[7] இது குமாரிலனின் விளக்கம். குமாரில-பட்ட, கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் Pūrva-mīmāṃsā-sūtraவுக்கு Śabaraவின் விளக்கவுரைக்கு Tantra-vārtika என்ற பெயரில் விரிவுரை எழுதியுள்ளார்.

[8] மித்ரமிஷ்ர(Mitramiśra)ரின் Vīra-mitrodaya எனும் பதினேழாம் நூற்றாண்டு சட்ட புத்தகத்திலிருந்து.

[9] ete garbhādhānādayaḥ saṃskārāḥ śarīraṃ saṃskurvantaḥ sarveṣu adrṣṭārtheṣu karmasu yogyatātiśayaṃ kurvanti. phalātiśayo yogyatātiśaye caKhādira-gṛhya-sūtra 2.3.33வுக்கான ருத்ரஸ்கந்த(Rudraskanda)னின் விளக்கவுரையிலிருந்து.

[10] க்ருஹ்ய-சூத்ரங்க(gṛhya-sūtras)ளில் ‘சமஸ்காரம்’ என்கிற சொல் அரிதாகவே காணக்கிடைக்கிறது (Vaikhānasa-smārta-sūtra இதற்கு ஒரு விதிவிலக்கு). தர்ம-சூத்ரங்க(dharma-sūtras)ளில் இச்சொல் அடிக்கடி வருகின்றது; உதாரணத்துக்கு, Gautama-dharma-sūtra 8.8, Āpastamba-dharma-sūtra 1.1.1.9, Vasiṣṭha-dharma-sūtra 4.1 போன்றவற்றைக் காண்க.

[11] HDS, பக்கம் 193.

இதற்கு முன் (HDS, பக்கம் 190யில்) டாக்டர் கானே அவர்கள் சமஸ்காரம் என்பது உபநயனத்தையே குறிக்கும் என்பதற்கு ஜைமினியின் Pūrva-mīmāṃsā-sūtra 6.1.35 (saṃskārasya tadarthatvādvidyāyāṃ puruṣaśrutiḥ) தன்னை மேற்கோளாகக் காட்டுகிறார். இதன்மூலம் இச்சடங்கின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறார்.

Author(s)

About:

Hari is a writer, translator, violinist, and designer with a deep interest in Vedanta, Carnatic music, education pedagogy design, and literature. He has worked on books like The New Bhagavad-Gita, Your Dharma and Mine, Srishti, and Foggy Fool's Farrago.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.