உபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை

This article is part 4 of 8 in the series உபநயனம்

‘உபநயனம்’ என்றால் ‘நெருங்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘அருகில் அழைத்து வருதல்’ என்று பொருள். ‘ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லுதல்’ அல்லது ‘கற்பதற்காக ஆசாரியரிடத்தில் அழைத்து வருதல்’ என்றும் பொருள் கொள்ளலாம்.[1] ‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான மற்றொரு விளக்கம் ‘கூடுதலான கண்’ அதாவது ‘அறிவுக்கண்’. இதனை உபயனம் (upayana)[2], பிரம்மோபதேசம் (brahmopadeśa), உபானயம் (upānaya), மௌஞ்ஜீ-பந்தனம் (mauñjī-bandhana), படு-கரணம் (baṭu-karaṇa), மற்றும் விரத-பந்தம் (vrata-bandha)[3] என்று பற்பல வார்த்தைகளில் அழைக்கிறோம். எவ்வாறு அழைப்பினும், ஒரு இளம் சிறுவன் மாணவனாக பிரவேசிப்பதே இதன் உட்கருத்து.[4] ஆசாரியரிடம் சென்று அந்த பாலகன், “நான் பிரம்மச்சரிய மார்க்கம் அனுஷ்டிக்க விரும்புகிறேன். எனக்கு அதனை தொடங்கி வையுங்கள் (அதாவது ‘அதனை நோக்கி என்னை இட்டுச் செல்லுங்கள்’). சவித்ர் (Savitṛ – சூரிய தேவன்) / சவிதா தேவதையின் தூண்டுதலால் நான் ஒரு மாணவன் ஆகிறேன்,” என்று கூறுகிறான்.[5] அதன் பிறகு அவன் முறையாக ஒரு பிரம்மசாரியாக, மாணவனாக ஆகிறான். இந்த நொடியிலிருந்து தான் தேர்ந்தெடுத்த துறையில் மிக ஒழுக்கத்தோடும், சிரத்தையோடும் அவன் பயணிக்கிறான்.

பொதுவாக, பள்ளிக்கூடத்தில் பிரவேசிப்பதற்கான ஒரு முறையான சடங்காக இதனைக் கொள்ளலாம். வேதம் கற்க நாட்டமுள்ள பாலகருக்கு உபநயனம் எனும் சடங்கு அமைந்து விளங்கியதைப் போலவே, பற்பல கல்வித் துறைகளில் ஈடுபட நாட்டமுள்ள மாணவ, மாணவியருக்கென வெவ்வேறு சடங்குகள் இருந்தன. உதாரணத்துக்கு, நடனப் பயிற்சி பெற விரும்புவோர் சலங்கைகளை வணங்கி அப்பயிற்சியைத் தொடங்குவர். இன்றுங்கூட இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தில், மாணவரின் மணிக்கட்டில் அவரது குரு கயிற்றைக் (gaṇḍa) கட்டும் வழக்கமுள்ளது.[6]

‘உபநயனம்’ என்ற வார்த்தைக்கான விளக்கமாக (அ) மாணவனை ஆசிரியரிடத்தே அழைத்து செல்லுதல் மற்றும் (ஆ) மாணவனை ஆசிரியரிடத்தே அழைத்து செல்வதற்கான சடங்கு என்று இரு வகையாகக் கொள்ளலாம். இவற்றுள் முதல் வகையே அசலான விளக்கமாக இருந்தது. நாளடைவில் அதற்கென ஒரு சடங்கு அமலில் வந்ததால் இரண்டாம் விளக்கமே நிலைபெற்றுவிட்டது.[7] கற்க ஆசையுள்ள ஒரு மாணவனுக்கு (vidyārthi) போதிக்கும் சடங்கே உபநயனம்.[8] மாறாக, ‘ஸ்ருதி’யான (śruti) காயத்ரி மந்திரத்தை ஒரு மாணாக்கனுக்கு போதிக்கும் சடங்கே உபநயனம் ஆகும்.

உபநயனச் சடங்கு[9]

உலகின் பல கலாச்சாரங்களிலும் ஒரு இளம் பாலகன் தகுந்த பிராயம் எட்டியதும் அவனை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு தயார்படுத்த விதவிதமான சடங்குகள் நடத்தப்படுகின்றன. இது தேச காலங்களுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு சமுதாயத்துக்கும், பழங்குடியினருக்கும் மாறுபடும். ஒரு இளைஞன் அங்கம்வகிக்கும் சமுதாயத்தில் அவனது கடமைகளை சுட்டிக்காட்டி அவ்விடத்துக்கு ஏற்ற குடிமகனாக அவனை உருவாக்குவதே இச்சடங்கின் முக்கிய நோக்கம்.[10]

உலகின் பல பழமையான சமுதாயங்களிலும் இச்சடங்கு அன்னாரது உடல் வலிமையை சோதிப்பதற்கே-சகிப்புத்தன்மையை சோதித்தல், விருத்தசேதனம் போன்று-ஏற்படுத்தப்பட்டன. ஆனால் உலக வரலாற்றிலேயே, இந்து சமுதாயத்தில் மட்டுமே இது உடல், மனம், கலாச்சாரம் என்று அனைத்தையும் போதிக்கும் சடங்காக அமைந்து விளங்கியது. பிரபஞ்ச அறிவை போதித்து, அதையே தமது சமுதாய அடையாளமாக உலகிற்கு பறைசாற்றிய இந்து சமுதாயத்தின் தனித்துவத் தன்மை இது.[11] பண்டைய காலத்து நமது ரிஷிகள் நம்மை ‘அழியா அமரத்துவத்தின் குழந்தைகள்’[12] என்றே அழைக்கின்றனர்; பிறக்கும்போது இவ்வாறு இருப்பினும், வயது செல்லச்செல்ல நாம் இத்தூய்மையை இழந்து விடுகிறோம். வேதங்களை நன்கு கற்றுணர நாம் மீண்டும் இம்மனப்பக்குவத்தைப் பெற வேண்டும்; மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும். இரண்டாம் பிறப்பாக, ஆன்மீகப் பாதையில் ஒருவரை வழிநடத்துவதே இச்சடங்கின் முக்கிய நோக்கம்.

உபநயன சடங்கின் அசலான நோக்கம் மாணவனுக்கு கல்வி புகட்டுவது. அதாவது அவன் தனது குருவின் குடும்பத்தில் ஒருவனாக அவரோடு தங்கி இருந்து, அவரது தேவைகளை பூர்த்தி செய்து, அவரிடம் கல்வி கற்று, சிரத்தையோடு பயிற்சி எடுத்துக் கொள்வது. இதையே நாம் குருகுலம் என்றழைக்கிறோம். கல்வி கற்க நாட்டமுள்ள ஒருவருக்கான சடங்கே உபநயனம்.[13] வேதத்தின் ஒவ்வொரு பாகத்தை கற்கத் துவங்கும்போதும் உபநயனம் நடத்தப்பட்டது.[14] முற்காலங்களில், ஒவ்வொரு முறை குருவை வணங்கி வேத தத்துவங்களின் வெவ்வேறு புதிய கிளையை கற்க முற்படும்போதும், உபநயனச் சடங்கு நடைபெற்றது.[15] சிந்தித்துப் பார்த்தால், இப்போது உள்ளதைப்போல அல்லாமல் அது ஒரு எளிய சடங்காகவே அமைந்திருக்கும் என்பது நன்கு புலப்படும்.

வேதங்களை கற்றுத் தெளிவதே உபநயனத்தின் முக்கிய நோக்காக விளங்கியது. சிஷ்யனுக்கு ‘மகா வாக்கியங்களை’ (mahāvyāhṛtis) போதித்ததும், குரு அவனுக்கு வேதங்களையும், நடைமுறை விதிகளையும் போதிக்கிறார்.[16] நாளடைவில் உபநயன சடங்கும் அதற்கான விரதங்களும் (Vratādeśa) மாத்திரமே பிரதானமெனக் கொள்ளப்பட்டு, கல்வி கற்பது பின்னுக்குத் தள்ளப்பட்டது. தற்காலத்திலோ, இவ்விரதங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வெறும் உபநயன சடங்கு மாத்திரமே எஞ்சி நிற்கிறது.

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

அடிக்குறிப்புகள்

[1] Atharva-veda-saṃhitā 11.5.3—‘Upanayamāno brahmacāriṇam’—என்கிற இடத்தில் ‘உபநயனம்’ என்ற சொல் ‘மாணவனுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வது’ என்கிற அர்த்தத்தில் வருகிறது. (HS, பக்கம் 115)

[2] Kāṭhaka-gṛhya-sūtra 41.1

[3] Kāṭhaka-gṛhya-sūtra 41.1வுக்கான விளக்கவுறையில் ‘ādityadarśana,’ ‘upānaya,’ ‘upanayana,’ ‘mauñjī-bandhana,’ ‘baṭu-karaṇa,’ மற்றும் ‘vrata-bandha’ ஆகியவற்றை இணைச்சொற்கள் என்கிறார் (HDS, பக்கம் 268)

[4] ஒரு சில கிருஹ்ய சூத்திரங்கள் இதனைத் தெளிவாகப் புரிய வைக்கின்றன என டாக்டர் கானே அவர்கள் கூறுகிறார். உதாரணத்துக்கு, ‘Brahmacaryamāgāmiti vācayati brahmacāryasānīti ca’ – Pāraskara-gṛhya-sūtra 2.2.6; மற்றும் Gobhila-gṛhya-sūtra 2.10.21 ஆகியவற்றைப் பார்க்கவும். ‘Brahmacaryamāgām’ மற்றும் ‘brahmacāryasāni’ ஆகிய பதங்கள் Śatapatha-brāhmaṇa 11.5.4.1இல் வருகின்றன; ‘Brahmacarya...prasūtaḥ’ என்பதற்கு Āpastamba-mantra-pāṭha 2.3.26வைப் பார்க்கவும். Yājñavalkya-smṛti 1.14 குறித்து விஸ்வரூபர் (Viśvarūpa) ‘Vedādhyayanāyācāryasamīpanayanamupanayanaṃ tadevopanāyanamityuktaṃ chandonusodhāt. Tadarthaṃ vā karma,’ என்கிறார். Hiraṇyakeśi-gṛhya-sūtra 1.1.1 பற்றின மாத்ரதத்தரின் (Mātṛdatta) வர்ணனையைக் காண்க (HDS, பக்கம் 268)

[5] Athainamabhivyāhārayati. Brahmacaryamāgāmupa mā nayasva brahmacārī bhavāni devena savitrā prasūtaḥHiraṇyakeśi-gṛhya-sūtra 1.5.2

[6] இதனை முழுமையாக புரிந்துகொள்ள நாட்டுப்புற கலாச்சாரம் பற்றின புரிதலும், நமது கலாச்சாரத்தைப் பற்றின புரிதலும் அவசியமாகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இந்து சம்பிரதாயங்களின் நுணுக்கங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் அவற்றை மேலோங்குவாதம் என்றும், பிரத்தியேகவாதம் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.  

[7] HDS, பக்கம் 269

[8] Upanayanaṃ vidyārthasya śrutitaḥ saṃskāraḥĀpastamba-dharma-sūtra 1.1.1.9

[9] HS, பக்கங்கள் 111–17

[10] The Power of Myth (‘The First Storytellers’) என்ற 1988யின் பிரபல தொலைக்காட்சித் தொடரில், புராணவியலாளரான Joseph Campbell அவர்கள் பற்பல கலாச்சாரங்களில் காணப்படும் சடங்குகளை விவாதிக்கிறார். அந்த முழு அத்தியாயத்தின் தொகுப்பையும் இந்த வலைதளத்தில் காணலாம்: http://billmoyers.com/content/ep-3-joseph-campbell-and-the-power-of-myth...

[11] HS, பக்கம் 112

[12] …amṛtasya putrā…Ṛgveda-saṃhitā 10.13.1

[13] Upanayanaṃ vidyārthasya śrutitaḥ saṃskāraḥĀpastamba-dharma-sūtra 1.1.1.9

[14] Yacchākhīyaistu saṃskāraiḥ saṃskṛto brāhmaṇo bhavet. Tacchākhādhyayanaṃ kāryamevaṃ na patito bhavet – என வசிஷ்டர் Vīra-mitrodaya Saṃskāra-prakāśa, Vol. 1, பக்கம் 337இல் மேற்கோள் காட்டுகிறார்

[15] Chāndogyopaniṣad 5.2.7யில் இது அறிவுறுத்தப்படுகிறது.

[16] Upanīya guruḥ śiṣyaṃ mahāvyāhṛtipūrvakam. Vedamadhyāpayedenaṃ śaucācārāṃśca śikṣayet.Yājñavalkya-smṛti 1.15

Author(s)

About:

Hari is a writer, translator, violinist, and designer with a deep interest in Vedanta, Carnatic music, education pedagogy design, and literature. He has worked on books like The New Bhagavad-Gita, Your Dharma and Mine, Srishti, and Foggy Fool's Farrago.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.