வரலாற்றில் உபநயனத்தின் வளர்ச்சி

This article is part 5 of 9 in the series உபநயனம்

நமது பாரம்பரிய இலக்கியங்களான ஸ்ருதி (śruti), ஸ்மிருதி (smṛti) இவற்றைத் தெரிந்து கொள்வதற்குமுன்னும், ஒரு குறிப்பிட்ட நூலின் காலக்ரமம் மற்றும் வெவ்வேறு நூல்களுக்கு இடையேயான காலக்ரமங்கள்  போன்றவற்றை உள்ளடக்கிய நவீன வரலாற்று கோட்பாடுகளை கருத்தில் கொள்வதற்கு முன்னும், இந்திய வரலாற்று பாரம்பரியத்தை பற்றின தெளிவான புரிதல் நமக்கு இங்கே அவசியமாகிறது.

புள்ளிவிவரங்களைக் காட்டிலும் விலைமதிப்பற்ற கருத்துக்களை வலியுறுத்துவதே இந்தியர்களின் வரலாற்று நோக்கமாக இருந்தது. பண்டைய காலத்தவர் கால சுழற்சியை கருத்தில்கொண்டு வாழ்ந்ததால்[1] அவர்கள் யார், எப்போது, எங்கே என்பதைத் தேடுவதை விடுத்து, ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டனர். சனாதன தர்மத்தின் பழமையான படைப்புக்கள் அனைத்துமே சமூகப் பதிவுகள்; அக்காலத்து ரிஷி-ரிஷிகைகளின் அறிவுப் பெட்டகமான இது பல காலங்கள் கடந்து சென்ற பின்பே தொகுக்கப்பட்டது. நவீன உலகத்தில் உள்ளதைப் போலல்லாமல் சிந்தனைக்கும் ஆவணப்பதிவுகளுக்கும் நீண்ட இடைவெளி இருந்தது.

வேதங்கள் சமூகப் பதிவுகளாக இருப்பினும், சில சூத்திரங்களும் பெரும்பாலான ஸ்மிருதிகளும் ஒரு சில தனி மனிதர்களின் பதிவுகள் (உதாரணத்துக்கு மனு, யாக்ஞவல்கியர், பராசரரைப் போன்றோர்). பாரம்பரியத்தை நிலைநாட்டும் சமூகப் பண்பானது நாளடைவில் தனி நபர்களால் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, சமுதாயத்தினரால் உருவாக்கப்பட்டுவந்த பண்பாடுகள் நாளடைவில் மேதாவியான ஏதோ ஒரு தனி நபரால் நிர்ணயிக்கப்பட்டது.

வேதங்களின் வெவ்வேறு பாகங்களான ஸம்ஹிதை (Saṃhitās), பிராஹ்மணம் (Brāhmaṇas), ஆரண்யகம் (Āraṇyakas), மற்றும் உபநிஷதம் (Upaniṣads) ஆகியவற்றின் பல பகுதிகள் மேற்பொருந்தி இருப்பதைக் காண்கிறோம். அவற்றை முதன்முதலில் பதிவு செய்தபோது இதுபோன்ற பிரிவுகள் ஏதும் இருக்கவில்லை. இஷாவாஸ்யோபனிஷத் (Īśavāsyopaniṣad) முழுவதும் ஸம்ஹிதை (Saṃhitā) பாகத்தில் அடங்கியுள்ளது; உபநிஷத்துக்களில் ஸம்ஹிதா பத்திகள் சில வருகின்றன; ஷதபத-ப்ராஹ்மணத்தின் (Śatapatha-brāhmaṇa) நிறைவுப் பகுதியில் பிருஹதாரண்யக உபனிஷத்தைக் (Bṛhadāraṇyakopaniṣad) காணலாம். எவ்விதம் உள்ளடக்கங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளதோ, அதேபோன்று வெவ்வேறு பாகங்களின் காலக்ரமங்களும் பின்னிப்பிணைந்துள்ளதைக் காண்கிறோம். உதாரணத்துக்கு, உபநிஷத்துக்களின் ஒரு சில பகுதிகள், ஸம்ஹிதையின் ஒரு சில பகுதிகளைக் காட்டிலும் முற்பட்டவைகளாக உள்ளன.

நமது வசதிக்காக வேண்டி, ஒரு குறிப்பிட்ட உரையின் கணிசமான தொகுதியையோ அல்லது பல உரைகளின் தொகுப்பையோ குறிக்கும்விதத்தில் முறையே – ஸம்ஹிதை (Saṃhitā) காலம், ப்ராஹ்மண (Brāhmaṇa) காலம், உபநிஷத் (Upaniṣad) காலம், சூத்திர (Sūtra) காலம், ஸ்மிருதி (Smṛti) காலம் – என காலவரிசைக் கிரமமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் இவை நமது வசதிக்கான காலவரிசை பிரிவுகளே அன்றி வெவ்வேறு சகாப்தங்களுக்கான பிரிவுகள் அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஸம்ஹிதை (Saṃhitās) மற்றும் ப்ராஹ்மணங்களும் (Brāhmaṇas), அதே நேரத்தில் சூத்திரங்கள் (Sūtra) மற்றும் ஸ்மிருதிக்களும் (Smṛti) ஒருசேர தோன்றி வளர்ந்து வந்தன. புத்தர் அவதரித்த காலகட்டத்தில் இவை அனைத்தும் ஓரளவிற்கு தொகுக்கப்பட்டிருந்தபடியால், கிட்டத்தட்ட மூன்றரை ஆயிரம் ஆண்டுகளாக இவற்றில் எந்த பெரிய மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ரிக்வேத-ஸம்ஹிதையின் (Ṛgveda-saṃhitā) துவக்கப் பகுதிகள் பொயுமு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன என்பதை கருத்தில் கொண்டால், கிட்டத்தட்ட மூன்றரை ஆயிரம் ஆண்டுகள் பண்டைய பாரத தேசத்தில் அறிவுத் தாக்கம் ஏற்பட்டு நடைமுறையிலுள்ள ஸ்ருதி (śruti) மற்றும் ஸ்மிருதி (smṛti) இவற்றுக்கு வித்திட்டன. கால ஓட்டத்தில் நாம் பல பண்டைய படைப்புக்களை இழந்துவிட்டோம் என்பதே நிதர்சனம்.

இப்போது வரலாற்றில் இச்சடங்கின் வளர்ச்சியைக் காணலாம்.[2] தூய மேகலை மற்றும் மேற்சட்டை (மேலாடை) என்று பண்டைய பாரசீக மத நூல்களில் (Zoroastrian scriptures) காணும்போதும்[3], ரிக்வேத சம்ஹிதையிலேயே 'பிரம்மசாரி' என்கிற வார்த்தையைக் காணும்போதும்[4], உபநயனம் எனும் சடங்கு மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றே தோன்றுகிறது.

ப்ராஹ்மண (Brāhmaṇa) காலம்[5] மற்றும் சூத்திர (Sūtra) காலத்தின்போது உபநயனம் என்பது வெறும் பாடசாலையில் சேர்ப்பதற்கான சடங்காகவே செய்யப்பட்டது.[6] ஸ்மிருதி (Smṛti) காலத்தில் இதுவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒருவனது ஜனனம் அவனது முதற்பிறப்பெனவும், காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்படுவதால் உபநயனம் என்பது அவனது இரண்டாம் பிறப்பிற்கான சடங்கெனவும் கருதப்பட்டது.[7] இதை அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஒரு சில வரிகள் நமக்கு நன்குணர்த்துகின்றன.

“மாணவனின் மறுபிறப்பை குறிக்கும் விதத்தில், முஞ்ஜைப் (muñja) புல்லால் ஆன வளையம் அணிவிக்கப்பட்டு வேதோபதேசம் அரங்கேறும் சமயத்தில் சாவித்திரி அவனது தாயாகவும் குரு அவனது தந்தையாகவும் விளங்குகின்றனர்.”[8]

“தாயின் கருவரையிலிருந்து வெளிவருவது முதல் பிறப்பு, உபநயனம் இரண்டாம் பிறப்பு, யக்ஞத்துக்கு அவன் தயாராகும்போது மூன்றாம் பிறப்பு என ஒரு மனிதனுக்கு மொத்தம் மூன்று பிறவிகள்.”[9]

“குருவின் ஆதரவால் அவன் வித்யா தேவதையிலிருந்து பிறக்கிறான்(குரு அவனுக்கு வேதோபதேசம் செய்விப்பதால்); அவனது பெற்றோர் அவனுக்கு வெறும் உடலை மாத்திரமே வழங்குவதால், குருவினால் விளையும் இம்மறுபிறப்பானது அவனது இயற்பிறப்பைக் காட்டிலும் மேலானது.”[10]

உபநயனத்தின் அர்த்தம் மாறிவிட்டது. இப்போது அது குருவின் வாயிலாக மாணவனுக்கும், சாவித்திரி தேவதைக்கும் ஏற்படுகிற தொடர்பை குறிக்கவே பயன்படுகிறது.[11] அதன்பின் உபநயனம் என்பது குருவிடத்திலே மாணவனை அவன் பெற்றோர் சென்று சேர்ப்பிப்பதற்கான சடங்காக விளங்கியது. ஒரு குருவினிடத்தே சிஷ்யனை அழைத்துச் செல்வதற்கு மட்டுமேயான சடங்கானது.[12] அவனது குருவிற்கு உட்பட்டு தன்னடக்கத்துடன் தேவதைகளை உபாசித்து வேதம் பயின்று கல்வி பெருவதற்கான சடங்கான உபநயனம் நாளடைவில் அதன் பொருளை இழந்தது.[13]

இன்றோ கல்விக்கும் உபநயனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அன்று மேகலையை அணிவித்ததற்கு பதில் இன்று பூணூல் அணிவிக்கப்படுகிறது, அவ்வளவே.[14] மறுபிறப்பிற்கான சடங்கானது ஆன்மீக கல்வி போதனையிலிருந்து விலகி வெறும் ஒரு சம்பிரதாய சடங்காக மட்டும் ஆகிவிட்டது. 

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

அடிக்குறிப்புகள்

[1] இயற்கை அவர்களுக்களித்த பாடமிது என்பதை சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்பதில்லை; பகல்-இரவு, அரைத்திங்கள்கள் மற்றும் பருவங்கள் ஆகியவற்றின் சுழற்சிச் சக்கரங்களை கண்டு அவர்கள் உணர்ந்தது இது

[2] HDS, pp. 268–74 மற்றும் HS, pp. 112–15

[3] Sacred Books of the East, Vol. V. Pahlavi Texts, Part 1: The Bundahis, Bahman Yast, மற்றும் Shâyast Lâ-shâyast. Tr. West, E. W. Ed. Müller, Max. Oxford: Clarendon Press, 1880. pp. 285-90 ஆகியவற்றைக் காண்க

[4] Brahmacārī carati veviṣadviṣaḥ sa devānāṃ bhavatyekamaṅgam. Tena jāyāmanvavindad bṛhaspatiḥ somena nītāṃjuhvaṃ na devāḥ. – Ṛgveda-saṃhitā 10.109.5

தேவர்களே! அனைத்தையும் வியாபித்து நிற்கும் பிருஹஸ்பதியானவர் யக்ஞங்கள் அனைத்தையும் வியாபித்து நிற்கும் பிரம்மசாரியைப்போல நகர்கிறார்-அவர் தேவர்களின் (அதாவது, யக்ஞங்களின்) ஒரு பாகத்தவரே ஆவார்; தேவர்களுக்கு பணியாற்றியதன்மூலம் பிருஹஸ்பதி சோம தேவரால் பராமரிக்கப்பட்டுவந்த ஜுஹு ஆகிய என்னை மனைவியாக அடைந்தார் (HDS, பக்கம் 268)

[5] Śatapatha-brāhmaṇa 11.5.4வைக் காண்க

[6] இரண்டாம் பிறப்பு பற்றின கருத்து வேதத்தில் இடம்பெற்றிருந்தாலும், கல்வியே பிரதானமாக அங்கு கொள்ளப்பட்டது:

Ācārya upanayamāno brahmacāriṇaṃ kṛṇute garbhamantaḥ. Tam rātrīstisra udare bibharti taṃ jātaṃ draṣṭumabhisaṃyanti devāḥ. – Atharvaveda-saṃhitā 11.5.3

குருவானவர் பொறுப்பேற்றதும், வேதம் கற்க வந்த மாணவனை கருவைப்போல சுமக்கிறார்; அவனை மூன்று இரவுகள் தமது வயிற்றில் சுமக்கிறார்; அவன் பிறப்பை எதிர்கொண்டு தேவர்கள் புடைசூழ்ந்து நிற்கின்றனர்! (HS, பக்கம் 113)

[7] Taddvitīyaṃ janma. Tadyasmātsa ācāryaḥ. Vedānuvacanācca. – Gautama-dharma-sūtra 1.8-10

[8] Tatra yad brahmajanmāsya mauñjībandhanacihnitam. Tatrāsya mātā sāvitrī pitā tvācārya ucyate. – Manu-smṛti 2.170

[9] Māturagre’dhijananaṃ dvitīyaṃ mauñjibandhane. Tṛtīyaṃ yajñadīkṣāyāṃ dvijasya śruticodanāt. – Manu-smṛti 2.169

[10] Sa hi vidyātastaṃ janayati. Tacchreṣṭhaṃ janma. Śarīrameva mātāpitarau janayataḥ.Āpastamba-dharma-sūtra 1.1.1.16-18 (HDS, பக்கம். 189)

[11] Yājñavalkya-smṛti 1.14க்கான Aparārkaவின் வர்ணனையைப் பார்க்கவும்

[12] Upa samīpe ācāryādīnāṃ vaṭornītirnayanaṃ prāpaṇamupanayanam – Bhāruci quoted in Vīra-mitrodaya Saṃskāra-prakāśa Vol. 1, p. 334

[13] Gurorvratānāṃ vedasya yamasya niyamasya ca. Devatānāṃ samīpaṃ vā yenāsī nīyate’sau.Vīra-mitrodaya Saṃskāra-prakāśa, Vol. 1, p. 334வில் Abhiyukta சுட்டிக்காட்டுகிறார்

[14] Cf. Yajñopavītaṃ kurute sūtraṃ vastra kuśarajju vāteGobhila-gṛhya-sūtra 2.10; Tṛtīyamuttarīyāryī vastrā’lābhe tadiṣyateVīra-mitrodaya Saṃskāra-prakāśa, Vol. 1, p. 415வில் தேவலர் சுட்டிக்காட்டுகிறார்

Author(s)

About:

Hari is a writer, translator, violinist, and designer with a deep interest in Vedanta, Carnatic music, education pedagogy design, and literature. He has worked on books like The New Bhagavad-Gita, Your Dharma and Mine, Srishti, and Foggy Fool's Farrago.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.